அதிகாரம் - 98முகப்பு / Home
ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு
அஃதிறந்து வாழ்தும் எனல்.
(971) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - ஒருவனுக்கு ஒளி ஊக்கமிகுதியே ஆகும், ஒருவனுக்கு இழிவு அந்த ஊக்கம் இல்லாமலேயே உயிர்வாழலாம் என்று எண்ணுதலாம்.
பேராசிரியர் சாலமன் பாப்பையா - ஒருவனுக்குப் பெருமை, பிறர் செய்ய முடியாத நல்ல செய்வேன் என்று எண்ணும் மன ஊக்கமே; அவ்வூக்கம் இல்லாமல் வாழ்வேன் என்று எண்ணுவது கேவலமே.
கலைஞர் மு. கருணாநிதி - ஒருவரின் வாழ்க்கைக்கு ஒளிதருவது ஊக்கமேயாகும் ஊக்கமின்றி உயிர்வாழ்வது இழிவு தருவதாகும்
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.
(972) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒருத் தன்மையானதே, ஆயினும் செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை.
பேராசிரியர் சாலமன் பாப்பையா - எல்லா மக்களும் பிறப்பால் சமமே; அவரவர் செய்யும் செயல் வேறுபாடுகளால் மட்டுமே பெருமை வரும்.
கலைஞர் மு. கருணாநிதி - பிறப்பினால் அனைவரும் சமம் செய்யும் தொழிலில் காட்டுகிற திறமையில் மட்டுமே வேறுபாடு காண முடியும்
மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர்.
(973) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - மேல்நிலையில் இருந்தாலும் மேன்மைப் பண்பு இல்லாதவர் மேலானவர் அல்லர், கீழ் நிலையில் இருந்தாலும் இழிகுணம் இல்லாதவர் கீழ் மக்கள் அல்லர்.
பேராசிரியர் சாலமன் பாப்பையா - நல்ல பண்புகள் ( பெருமைகள்) இல்லாதவர் உயர்ந்த பதவியில் இருந்தாலும் பெருமைக்கு உரியவர் அல்லர்; சிறிய பதவியில் இருந்தாலும் உயர்வான பண்புகளை உடையவர் பெருமை குறைந்தவர் அல்லர்.
கலைஞர் மு. கருணாநிதி - பண்பு இல்லாதவர்கள் உயர்ந்த பதவியில் இருந்தாலும் உயர்ந்தோர் அல்லர்; இழிவான காரியங்களில் ஈடுபடாதவர்கள் தாழ்ந்த நிலையில் இருந்தாலும் உயர்ந்தோரேயாவார்கள்
ஒருமை மகளிரே போலப் பெருமையும்
தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு.
(974) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - ஒரு தன்மையான கற்புடைய மகளிரைப்போல் பெருமைப் பண்பும் ஒருவன் தன்னைத் தான் காத்துக் கொண்டு நடந்தால் உளதாகும்.
பேராசிரியர் சாலமன் பாப்பையா - தன் கணவனை அன்றிப் பிறரிடம் மனத்தாலும் உறவு கொள்ளாத பெண்களின் சிறப்பைப் போல,சிறந்து நெறிகளிலிருந்து தவறி விடாமல் தன்னைக் காத்துக்கொண்டு வாழ்பவனுக்கே பெருமை உண்டு.
கலைஞர் மு. கருணாநிதி - தன்னிலை தவறாமல் ஒருவன் தன்னைத் தானே காத்துக்கொண்டு வாழ்வானேயானால், கற்புக்கரசிகளுக்குக் கிடைக்கும் புகழும் பெருமையும் அவனுக்குக் கிடைக்கும்
பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல்.
(975) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - பெருமைப் பண்பு உடையவர் செய்வதற்கு அருமையானச் செயலைச் செய்வதற்க்கு உரிய நெறியில் செய்து முடிக்க வல்லவர் ஆவர்.
பேராசிரியர் சாலமன் பாப்பையா - எத்தனை நெருக்கடி வந்தாலும் பிறர் செய்வதற்கு அரிய செயல்களை உரிய வழிகளில் செய்து முடிப்பவர் பெருமை உடையவர்.
கலைஞர் மு. கருணாநிதி - அரிய செயல்களை அவற்றுக்கு உரிய முறையான வழியில் செய்து முடிக்கும் திறமையுடையவர்கள் பெருமைக்குரியவராவார்கள்
சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்
பேணிக் கொள் வேம் என்னும் நோக்கு.
(976) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - பெரியாரை விரும்பிப் போற்றுவோம் எண்ணும் உயர்ந்த நோக்கம், அவருடைய சிறப்பை உணராத சிறியோரின் உணர்ச்சியில் இல்லை.
பேராசிரியர் சாலமன் பாப்பையா - பெருமைக்கு உரியவர்களைப் பின்பற்றி அவர் மரபைக் காப்போம் என்னும் நல்லெண்ணம் சிறியவர் மனத்துள் இராது.
கலைஞர் மு. கருணாநிதி - பெரியோரைப் போற்றி ஏற்றுக்கொள்ளும் நோக்கம், அறிவிற் சிறியோரின் உணர்ச்சியில் ஒன்றியிருப்பதில்லை
இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்
சீரல் லவர்கண் படின்.
(977) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - சிறப்பு நிலையும் தனக்கு பொருந்தாத சீரற்ற கீழ் மக்களிடம் ஏற்பட்டால், வரம்பு மீறிய செயலை உடையதாகும்.
பேராசிரியர் சாலமன் பாப்பையா - பணம், படிப்பு, பதவி ஆகிய சிறப்புகள் சிறுமைக்குணம் உடையவரிடம் சேர்ந்தால், அவர்களின் செயல்கள் அகங்காரத்தோடு வருவனவாம்.
கலைஞர் மு. கருணாநிதி - சிறப்பான நிலையுங்கூட அதற்குப் பொருந்தாத கீழ் மக்களுக்குக் கிட்டுமானால், அவர்கள் வரம்புமீறிச் செயல்படுவது இயற்கை
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து.
(978) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - பெருமைப் பண்பு எக்காலத்திலும் பணிந்து நடக்கும், ஆனால் சிறுமையோ தன்னைத் தானே வியந்துப் பாராட்டிக் கொள்ளும்.
பேராசிரியர் சாலமன் பாப்பையா - பெருமை உடையவர் செருக்கு இல்லாமல் பணிவுடன் இருப்பர்; சிறுமை உடையவரோ செருக்குடன் தம்மைத் தாமே வியந்து பாராட்டுவர்.
கலைஞர் மு. கருணாநிதி - பண்புடைய பெரியோர் எல்லோரிடமும் எப்பொழுதும் பணிவுடன் பழகுவார்கள்; பண்பு இல்லாத சிறியோர், தம்மைத் தாமே புகழ்ந்து கொண்டு இறுமாந்து கிடப்பார்கள்
பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல்.
(979) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - பெருமை பண்பு செருக்கு இல்லாமல் வாழ்தல், சிறுமையோ செருக்கே மிகுந்து அதன் எல்லையில் நின்று விடுவதாகும்.
பேராசிரியர் சாலமன் பாப்பையா - பெருமைப்பட்டுக் கொள்ளக் காரணங்கள் இருந்தும் செருக்கு இல்லாமல் இருப்பது பெருமை; காரணம் இல்லாமலேயே பெருமைப்பட்டுக் கொள்வது சிறுமை.
கலைஞர் மு. கருணாநிதி - ஆணவமின்றி அடக்கமாக இருப்பது பெருமை எனப்படும் ஆணவத்தின் எல்லைக்கே சென்று விடுவது சிறுமை எனப்படும்
அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும்.
(980) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - பெருமைப் பண்பு பிறருடைய குறைப்பாட்டை மறைக்கும், சிறுமையோ பிறருடைய குற்றத்தையே எடுத்துச் சொல்லிவிடும்
பேராசிரியர் சாலமன் பாப்பையா - பெருமைக்குரியவர் பிறர் பெருமைகளைச் சொல்லி அவர் குறைகளைக் கூறாமல் மறைத்து விடுவர்; சிறுமைக்கு உரியவர்களோ பிறர் பெருமைகளை மறைத்துக் குறைகளை மட்டுமே கூறிவிடுவர்.
கலைஞர் மு. கருணாநிதி - பிறருடைய குறைகளை மறைப்பது பெருமைப் பண்பாகும் பிறருடைய குற்றங்களையே கூறிக்கொண்டிருப்பது சிறுமைக் குணமாகும்